Tuesday, September 30, 2025
Homeவிவசாயம்மண்புழு உரம் தயாரித்தல் மற்றும் பயன்கள்

மண்புழு உரம் தயாரித்தல் மற்றும் பயன்கள்

கழிவுகள் என்பது நாம் முறையாக பயன்படுத்த தவறிய மூலப்பொருள்கள் ஆகும். பொதுவாக வேளாண் கழிவுகள், கால்நடை கழிவுகள் போன்றவற்றை ஒரே இடத்தில் குவித்து வைக்கும் பொழுது கெட்ட நாற்றம் ஏற்படுகிறது. ஆனால் அவற்றில் இருந்து அதிக அளவிலான இயற்கை எருவை உருவாக்க முடியும். இந்த மதிப்புள்ள மூலப்பொருள்களை முறையாக மட்கவைப்பதின் மூலம் நமக்கு மதிப்பூட்டப்பட்ட எரு கிடைக்கிறது. இவ்வாறு அங்ககக் கழிவுகளை மக்கவைத்து வளம் குன்றிய மண்ணை பேணிக்காப்பதே மண்புழு உரத்தின் (Vermicompost) முதன்மையான பயனாகும்.

உள்ளூர் இரக மண்புழுக்களைக் கொண்டு மண்புழு உரம் (Vermicompost) தயாரித்தல்

உலக அளவில் சுமார் 2500 மண்புழு இனங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இதில் 500 வகை இனங்கள் இந்தியாவில் உள்ளன. வெவ்வேறு மண்வகைக்கு ஏற்ப மண்புழு உரங்கள் மாறுபடும். எனவே மண்புழு உரம் தயாரிக்க அந்தந்த மண்ணிற்கு ஏற்ற மண்புழுக்களை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியம் இல்லை. இந்தியாவில் பெரியோனிக்ஸ் எக்ஸ்கவேடஸ் மற்றும் லேம்பீட்டோ மெளருட்டி என்ற இரு இனங்களை பயன்படுத்துகிறோம். மண்புழுக்களை வளர்ப்பதற்கு, குழிகளையோ, தொட்டிகளையோ அல்லது வளைவான கட்டமைப்புகளையோ பயன்படுத்தி கொள்ளலாம்.

Vermicompost

எவ்வாறு உள்ளூர் ரக மண்புழுக்களை தேர்வு செய்ய முடியும்?

  • மண்ணின் மேற்பரப்பில் தென்படக்கூடிய, புழுக்களின் ஆக்கிரமிப்புள்ள மண்ணை கண்டறிய வேண்டும்.
  • 500 கிராம் வெல்லம் மற்றும் ஒரு கிலோ மாட்டுச்சாணம் ஆகிய இரண்டையும் 2 லிட்டர் தண்ணீரில் கரைத்து 1 மீ x 1 மீ பரப்பளவில் மண்ணின் மேல் தெளிக்க வேண்டும்.
  • வைக்கோல் கொண்டு மூடிவிட்டு பின்பு அதன் மேல் கோணிப்பை வைத்து போர்த்த வேண்டும்.
  • 20-30 நாட்களுக்கு தண்ணீர் தெளிக்க வேண்டும்.
  • அந்த இடத்தில், மண்புழுக்கள் மேற்பரப்பில் அதிக அளவில் வரத்தொடங்கும். அவற்றை சேகரித்து பயன்படுத்திக் கொள்ளலாம்.

எரு-குழி தயாரித்தல்

எரு-குழி தயாரிப்பதற்கு பல முறைகள் இருந்தாலும், நாம் நம் வசதிக்கேற்ற வடிவமைப்பில், வீட்டின் பின்புறத்திலோ, தோட்டத்திலோ அமைக்கலாம். செங்கற்கள் கொண்டு ஒரு குழி, இரு குழி அல்லது வசதிக்கேற்ற அளவிளான தொட்டிகள் போன்றவற்றை முறையான நீர் வெளியேற்றக் குழாய்களுடன் அமைக்க வேண்டும். வேளாண் கழிவுகள் மற்றும் இதர பொருட்களின் கொள்ளவைக் கொண்டு தொட்டிகளின் அளவை தீர்மானம் செய்ய வேண்டும். தொட்டிகளின் சுவரின் நடுவில் சிறு குழிகளில் நீர் தேக்கம் செய்வதன் மூலம் புழுக்களை எறும்பு தாக்கத்தில் இருந்து காப்பாற்ற முடியும்.

நான்கு அறை தொட்டி / குழி முறை

நான்கு அறை தொட்டிகளின் மூலம் புழுக்கள் ஒரு அறையில் இருந்து மற்றொரு அறைக்கு எளிதாக செல்கின்றன. இதன் மூலம், புழுக்கள் ஒரு அறையில் உள்ள கழிவுகள் நன்கு மட்கியவுடன், மற்றொரு அறைக்கு சென்று கழிவுகளை மட்கச் செய்கின்றன.

மண்புழு படுக்கை தயாரித்தல்

  • அடிப்பாகத்தில் சிறு கல் மற்றும் மணலின் (5 செமீ உயரம்) மேல் சுமார் 15-20 செமீ உயரத்திற்கு ஈரப்பதத்துடன் கூடிய வண்டல் மண் பரப்பப்பட்ட படுக்கை அமைக்க வேண்டும்.
  • வண்டல் மண்ணின் மீது மண்புழுக்களை விட்டவுடன், அவை மண்புழு படுக்கையை தன் சொந்த இருப்பிடம் போல் எண்ணுகின்றன. குழியை 2 மீ x 1 மீ x 0.75 செமீ என்ற அளவிலும், மண்புழு படுக்கை 15 – 20 செமீ என்ற அளவிலும் அமைய வேண்டும்.
  • கையளவு மாட்டுச்சாணத்தை படுக்கையின் மீது தூவ வேண்டும். பின்பு 5 செமீ உயரத்திற்கு வெட்டிய வைக்கோலையோ அல்லது இயற்கை கழிவுகளையோ இட வேண்டும். அடுத்த 30 நாட்களுக்கு தேவைப்படும்போதெல்லாம் நீர் தெளித்து ஈரப்பதத்துடன் வைத்துக்கொள்ள வேண்டும்.
  • படுக்கை வறண்டோ அல்லது சொதசொதப்பாகவோ இருக்கக்கூடாது. பறவைகளிடம் இருந்து காக்க தென்னை அல்லது பனை ஓலைகள் அல்லது கோணிப்பைகள் கொண்டு மூடி வைக்க வேண்டும்.
  • வெப்பத்தை இழுக்கும் தன்மையுடையது என்பதால் பிளாஸ்டிக் பைகளை உபயோகிக்கக் கூடாது. 30 நாட்கள் கழித்து ஈரப்பதமுடைய தாவரம் அல்லது கால்நடைக் கழிவுகளை, சமையலறை, உணவகம், வயல் போன்ற இடங்களில் இருந்து சேகரித்து அவற்றை சீர் செய்து 5 செமீ அளவிற்கு நிரப்ப வேண்டும்.
    இவ்வாறு வாரம் இருமுறை செய்ய வேண்டும். இயற்கை கழிவுகளை மண்வெட்டி கொண்டு முறையே கலக்கிவிட வேண்டும்.
  • சரியான அளவு ஈரப்பதத்தை பராமரிக்க, முறையாக நீர் தெளிக்க வேண்டும். வானிலை வறட்சியாக இருந்தால் அடிக்கடி நன்றாக நீர் தெளிக்க வேண்டும்.

எப்பொழுது எரு தயாராகும்?

  • அடர்-காப்பி நிறத்தில், பொடியாக, குருணையாக, எடைகுறைவாக, துளைகள் நிரம்பிய மெல்லிய மண் அடுக்கமைப்புடன் இருக்கும் தருணமே தொழுஉரம் தயார் நிலையில் இருக்கும் தருணம் ஆகும்.
  • 60 – 90 நாட்களில் (குழி அல்லது தொட்டியின் அளவை பொருத்து) தொழு எரு தயாராகி விடும். புழுக்களின் கூடுகளைப் பார்த்து, குழியிலிருந்து தொழு எருவை அறுவடை செய்யலாம்.
  • புழுக்களை தொழு எருவிலிருந்து எளிதாகப் பிரித்து எடுக்க, எரு எடுக்கும் 2-3 நாட்களுக்கு முன்பிருந்து நீரிடுவதை நிறுத்த வேண்டும். இதனால் 80 சதவீத புழுக்கள் படுக்கையின் அடிப்பகுதிக்குச் சென்றுவிடும்.
  • மேலும் புழுக்களை சல்லடை அல்லது வலைகள் கொண்டும் பிரித்து எடுக்கலாம். புழுக்களும், தடிமனான பொருட்களும் வலையின் மீது நின்று விடும். இதனை குழியில் கொட்டி திரும்பவும் பயன்படுத்தலாம். மட்கிய உரம் மண்வாசனை போன்ற மணம் உடையது. முழுமையாக மக்காமல் இருந்தால் அதிலிருந்து கெட்ட வாடை வரும். இது நுண்ணுயிரின் செயல்பாடு முடிவடையாமல் நடந்து கொண்டிருக்கிறது என்பதை தெளிவாக்கும். புளித்த வாடை வந்தால், அது பூஞ்சாணம் மற்றும் அதிக வெப்பத்தின் அறிகுறி ஆகும். இதனால் தழைச்சத்து இழப்பு நேரிடும். இவ்வாறு இருப்பின், நல்ல காற்றோட்டம் ஏற்படுத்தி, நாறு போன்ற பொருட்களை சேர்த்து உலர்த்த வேண்டும். பின்பு மட்கிய எருவை சல்லடை கொண்டு சலித்து எடுக்க வேண்டும்.
  • சேகரித்த பொருட்களை சூரிய ஒளியில் குவித்து வைக்க வேண்டும். இதனால் புழுக்கள் குளிர்ச்சியான அடிப்பகுதிக்கு சென்றுவிடும்.
  • இரு அறை அல்லது நான்கு அறை குழியில் நீரிடும் போது, முதல் அறைக்கு நீரிடுவதை நிறுத்தி விடவேண்டும். இதம் மூலம் புழுக்கள் தானாகவே ஒரு அறையிலிருந்து மற்றொரு அறைக்கு செல்கின்றன. இவ்வாறு செய்வதால் சுழற்சி முறையில் தொடர்ச்சியாக எருவை அறுவடை செய்ய முடிகிறது.

மண்புழு மட்கு உரத்தின் பயன்கள்

இயற்கை கழிவுகளை, மண்புழுக்களைக் கொண்டு மட்க வைப்பதன் மூலம், நல்ல கட்டமைப்புடன் கூடிய, நச்சுத்தன்மையற்ற நல்ல மதிப்பூட்டமுள்ள எரு கிடைக்கிறது.

பயிர் வளர்ச்சிக்கு தேவையான கணிமப்பொருள்களையும், நுண்ணூட்டங்களையும் பயிர்களுக்கு எளிதில் கிடைக்கச் செய்து நல்ல கலப்பு உரமாக செயல்படுகிறது.

தொழுஉரம், மண்ணில் உள்ள நோய் பரப்பக்கூடிய நுண்ணுயிர்களை குறைத்து விடுகிறது.

பொருளாதார ரீதியாக பின்தங்கிய நிலையில் உள்ள மக்களுக்கும், சமுகத்தின் கீழ்தட்டில் உள்ள மக்களுக்கும், மண்புழு தயாரித்தல் ஒரு சிறந்த குடிசைத் தொழிலாக அமைந்து அவர்களின் வாழ்க்கைக்கு கூடுதல் வருமானத்தை அளிக்கிறது.

ஒவ்வொரு கிராமத்திலும், வேலையில்லாத இளைஞர்களையும் பெண்களையும் இணைத்து கூட்டுறவு சங்கங்கள்அமைத்து, மண்புழு உரம் தயார்செய்யலாம். மேலும் அவர்களே விலை நிர்ணயம் செய்து கிராம விவசாயிகளுக்கு விற்பனை செய்து ஒரு புதுமை படைக்கலாம். இதன் மூலம் இளைஞர்கள் நல்ல வருமானம் பெறுகின்றனர். அதோடு மட்டுமல்லாமல் நல்ல தரமான தொழுஉரத்தை அளித்து ஒரு நல்ல நீடித்த வேளாண்மை தொழில் செய்ய ஊக்குவிக்கிறது.

RELATED ARTICLES

17 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments